search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏக்களுக்கு அழைப்பு"

    கர்நாடகாவில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ.க்கள் பாதுகாப்புக்காக தங்கள் மாநிலத்தில் தங்க வருமாறு கேரள சுற்றுலாத்துறை அழைப்பு விடுத்துள்ளது. #KarnatakaElections #KeralaTourism

    திருவனந்தபுரம்: 

    கர்நாடக சட்டசபை தேர்தலில் 222 தொகுதிகளில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதிகபட்சமாக பாஜக 104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், மற்றவை 3 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 

    இந்நிலையில், கூட்டணி ஆட்சி அமைக்க காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரசின் ஆதரவுக் கடிதத்துடன் குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். முதல்வர் பதவியை மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கும், துணை முதல்வர் பதவியை காங்கிரசுக்கும் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசுக்கு 20 அமைச்சர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 16 அமைச்சர்களும் என உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 

    104 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க. சார்பில் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்குமாறு ஆளுநரிடம் எடியூரப்பா கடிதம் அளித்துள்ளார். பெரும்பான்மைக்கு தேவையான 112 இடங்களை எந்த கட்சியும் பெறவில்லை. இதனால் ஆட்சி அமைக்க குதிரை பேரத்துக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. 

    காங்கிரஸ், மஜத எம்.எல்.ஏ,க்களை தங்கள் பக்கம் இழுத்து பெரும்பான்மையை நிரூபிக்க பா.ஜ.க. முயற்சி செய்யலாம் எனவும், தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற கூவத்தூர் பார்முலா போல் கர்நாடகாவிலும் அரங்கேறலாம் எனவும் கூறப்படுகிறது.



    இந்நிலையில், கேரள சுற்றுலாத்துறை கர்நாடகாவை சேர்ந்த காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் மாநிலத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து கேரள சுற்றுலாத்துறை அதிகாரப்பூர்வ டுவிட்டரில் பதிவு செய்திருந்ததாவது, 
    கர்நாடகா தேர்தல் முடிவுகள் குழப்பம் மற்றும் கடினமான சூழலை ஏற்படுத்தியுள்ளது, எனவே அனைத்து எம்.எல்.ஏ.க்களும் கடவுளின் பூமியான கேரளாவில் உள்ள ரிசார்ட்டுகளில் வந்து பத்திரமாக தங்கி இயற்கை அழகை ரசியுங்கள், என பதிவிட்டிருந்தது.

    இந்த பதிவிற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு அந்த பதிவை கண்டித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து சிறிது நேரத்தில் அந்த டுவிட்டர் பதிவு நீக்கப்பட்டது. #KarnatakaElections #KeralaTourism
    ×